கம்பஹா – மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1,115 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .
இதேவேளை, மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலின் முதல் தொடர்புகள் அனைவரையும் அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையுடன் சுகாதார அதிகாரிகள் இதனை கண்டறிந்துள்ளதாகவும் அத்தகைய பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொடர்புகளை அடையாளம் காணும் வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு வரை, கொழும்பு நகரத்தில் இருந்து எந்த நோயாளிகளும் கண்டறியப்படாத நிலையில் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற செய்திகளையும் அரசாங்க வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இருப்பினும் தொடர்புடையவர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் அதேவேளை நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அத்தோடு எதிர்வரும் நாட்களில் மேலும் ஆயிரக்கணக்கான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்பதால் மினுவாங்கொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.